பனிப்போரின் யுத்த களமாக உக்ரைன்! (பகுதி -6)
உக்ரைன் மறுபங்கீட்டிற்கான ஏகாதிபத்திய நாடுகளின் பனிப்போரை உள்நாட்டு போராக மாற்றி சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதே உக்ரைன் விடுதலைக்கான ஒரே வழி!
(பகுதி – 5 ன் தொடர்ச்சி)
பல்துருவ ஒழுங்கமைப்பு ஒற்றைத் துருவ மேலாதிக்கத்திற்கு மாற்றா?
அமெரிக்கா ஒற்றை துருவ மேலாதிக்க நாடு அல்லது அமெரிக்கா தலைமையில் ஒற்றை துருவ உலக அரசு உருவாகிவிட்டது அல்லது நாடு கடந்த நிதி மூலதனத்தின் ஒன்றுகுவிப்பு என்பன போன்ற கருத்தியல்களுக்கும் லெனினியத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. மாறாக அவை ஏகாதிபத்திய முரண்பாடுகளையும், ஏற்றத்தாழ்வான வளர்ச்சியையும் மூடிமறைக்கும் காவுத்ஸ்கியவாதமாகும். காவுத்ஸ்கியின் அதீத ஏகாதிபத்தியக் கருத்தியலின் மறுபதிப்பே ஆகும்.
பல்துருவ ஒழுங்கமைப்பு அல்லது மேலாதிக்கம் பற்றி திருத்தல்வாதிகள் பேசும்போது வெறும் மேலாதிக்கம் பற்றி மட்டும் பேசி மறுபங்கீட்டை மூடி மறைக்கிறார்கள். அரசியலிலிருந்து பொருளாதாரத்தை பிரிக்கும் காவுத்ஸ்கியின் பணியைத் தொடர்ந்து செய்கிறார்கள்.
காலனிகளை மறுபங்கீடு செய்வது ஏகாதிபத்தியத்தின் பண்புகளில் மிக முக்கியமான (5 வது பண்பு) பண்பாக லெனின் கூறுகிறார். திருத்தல்வாதிகள் ஏன் இதை மறுக்கிறார்கள்? முதலாவது, ஒற்றைத் துருவ மேலாதிக்க கண்ணோட்டம் அல்லது நாடு கடந்த நிதி மூலதனத்தின் ஒன்றுகுவிப்பு போன்ற காவுத்ஸ்கிய கருத்திலிருந்து மறுக்கிறார்கள். அடுத்து, காலனியாதிக்கம் முற்று பெற்றுவிட்டது எனும் குருசேவின் நவீன திருத்தல்வாதத்தில் இருந்து இதை மறுக்கிறார்கள். இதன் மூலம் மாவோவின் புதிய காலனியம் பற்றிய கருத்தாக்கத்தையும் மறுக்கிறார்கள். ஏகாதிபத்தியம் பற்றிய லெனினின் இந்த 5வது வரையறையை அதாவது மறுபங்கீட்டிற்கான ஏகாதிபத்தியங்களின் போர் தயாரிப்புகள் தவிர்க்க இயலாதவை எனும் வரையறையை கைவிடுவதில்தான் நவீன திருத்தல்வாதத்தின் வேர் அடங்கியுள்ளது.
ஆகவே மேலாதிக்கம் மட்டுமே பேசி மறுபங்கீட்டை மறுப்பது என்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும், புதிய காலனிய வடிவிலான மறுபங்கீட்டுப் (பனிப்போர், அமைதி வழியிலான மறுபங்கீடு போன்றவற்றை) போர்களையும் மறுப்பதாகும். ஆகவே மறுபங்கீட்டை மறுப்பது என்பது சாரம்சத்தில் ஏகாதிபத்தியம் பற்றிய லெனினியத்தை மறுப்பதாகும். மேலும் மேலாதிக்கம் மட்டும் பேசுவது இவர்களுக்கு ஏகாதிபத்தியங்களுக்கு முட்டுக்கொடுக்க வசதியாகவும் உள்ளது. மறுபங்கீடு என சொன்னால் மறுபங்கீட்டில் ஈடுபடும் இரு ஏகாதிபத்திய நாடுகளையும் எதிர்க்க வேண்டியிருக்கும். மேலாதிக்கம் பற்றி மட்டுமே பேசவதின் மூலம், அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்க எதிர்ப்பு எனும் பெயரில், சீனா ரசியா போன்ற பிற ஏகாதிபத்தியங்களின் பல்துருவ மேலாதிக்கம் முற்போக்கானது; அதில் அரைக்கால் அல்லது கால் ஜனநாயகம் கிடைக்கும் என்று கூறி ஈனத்தனமாக (உக்ரைன் போர் ரசியாவின் பிரதேச ஆதிக்கம் சொல்லிக்கொண்டே சிலர் ரசியாவை ஆதரிப்பது அதனினும் ஈனத்தனமானது) ஏகாதிபத்தியங்களுக்கு காவடி தூக்குகிறார்கள். ரசிய-சீனாவின் மறுபங்கீட்டை மூடிமறைத்து அதை ஆதரிப்பதன் மூலம், அமெரிக்காவின் மறுபங்கீட்டையும் ஆதரிக்கிறார்கள்.
அமெரிக்கா ஒற்றைத் துருவ மேலாதிக்கத்திற்கு முயன்றதே தவிர அது உருவாகவில்லை; உருவாகவும் முடியாது. 1990களுக்குப் பிறகு அமெரிக்க, ஐரோப்பிய, ரசிய, சீன ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் முரண்பாடுகள் நீடித்தே வந்தன. ரஷ்ய - சீன அணி சேர்க்கை உருவாகும் வரை அமெரிக்காவின் உலக மேலாதிக்க முயற்சிகளை எதிர்த்து அவைகளால் நிற்க முடியவில்லை. 2008க்கு பிறகான முதலாளிய நெருக்கடியால் அமெரிக்கா பொருளாதார ரீதியாகப் பலவீனமடைந்ததும் சீன - ரசியாவின் ஷாங்காய் கூட்டணி பலம் பெறுகிறது. 2018ல் சிரியாவில் அமெரிக்காவிற்கு எதிராக நேரடியாகச் சவால்விட்டு ராணுவ தளங்களை நிறுவி ரசியாவுடன் பனிப்போரில் ஈடுபடத் துவங்கியது. பனிப்போரின் துவக்கமாக இருந்த அந்த நடவடிக்கை தற்போது உக்ரைனில் உக்கிரமான பனிப்போராக வெடித்துள்ளது.
ரசிய-சீனாவின் ஷாங்காய் அணி முன்வைக்கும் பல்துருவ ஒழுங்கமைப்பு என்பது ஒற்றை துருவ அமைப்பிற்கு மாற்று இல்லை. உலகை மறுபங்கீடு செய்ய அமெரிக்காவிற்கு மட்டும் அதிகாரம் இல்லை; நாங்களும் மறுபங்கீட்டுப் போர்களுக்குத் தயாராகி விட்டோம் என்பதுதான் ஷாங்காய் கூட்டமைப்பு முன்வைக்கும் பல்துருவ ஒழுங்கமைப்பின் அரசியல் உள்ளடக்கம். பல்துருவ ஒழுங்கமைப்பை ஆதரிப்பதன் மூலம் திருத்தல்வாதிகள் மற்றும் கலைப்புவாதிகள் உக்ரைன், இந்தியா, தைவான் உள்ளிட்ட நாடுகளை அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் இல்லாமல் சீன-ரசிய ஆதிக்கத்தின் கீழ் துன்புறுமாறு ஆலோசனை வழங்குகிறார்கள். பல்துருவ ஒழுங்கமைப்பில் அரை சோசலிசம், அரை ஜனநாயகம் உருவாகும், பாலாறும் தேனாறும் ஓடும் என்றெல்லாம் பித்தலாட்டமாக திருத்தல்வாதிகள் பேசுகிறார்கள். ரசிய-சீனாவின் பல்துருவ ஒழுங்கமைப்பு உருவாக்கம் துவங்கி 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆகிவிட்டன என்று கதைக்கிறார்கள். ஆனால் எந்தெந்த நாடுகளில் அரை ஜனநாயகம், கால் ஜனநாயகம் உருவாகியுள்ளது என்பதை அவர்கள் விளக்கத் தயாரில்லை.
ஏகாதிபத்தியக் கைக்கூலியான அ. மார்க்ஸ் பல்துருவ ஒழுங்கமைப்பை ஆதரித்துப் பேசுவதை எடுத்துக் காட்டி ஏ.எம்.கே கூறுவதாவது :
"ஜனசக்தி வெளியீட்டின் 66ம் பக்கத்தில் கடைசி பத்தியில் அ. மார்க்ஸ் இவ்வாறு கூறுகிறார் - 'இப்போது ஒரு துருவத்திற்குப் பதில் பல துருவம் வந்துள்ளது. இது ஜனநாயகமான விசயம். சீனா ரசியா சோசலிச நாடுகளா என்பது விசயம் இல்லை. ரசியாவுடன் சேர்ந்திருப்பதே ஜனநாயகத்திற்கு உகந்தது' என்கிறார். இதன் உள்ளடக்கம் என்ன ? உலகைப் பகிர்ந்து கொள்ளப் போட்டியிடும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போராட்டத்தில், ஒரு ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இன்னொரு ஏகாதிபத்தியத்துடன் சேரக் கோருகிறார். உலகில் சோசலிச நாடு இல்லாத போது இந்த கோரிக்கை வருகிறது. அ. மார்க்ஸின் நிலைப்பாடு அப்பட்டமாக காவுத்ஸ்கியக் கோட்பாடு ஆகும்" (சர்வதேச அரசியல் பொது வழியைத் தீர்மானிப்பது குறித்த ஓர் அறிமுகம், ஏ.எம்.கே, பக்கம் 30)
இந்த நூலில் அவர் மேலும் கூறுவதாவது :
"முதலாளித்துவப் பாதையாளர்களாக மாறிவிட்ட சமூக ஜனநாயகவாதிகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அவரவர் சொந்த நாட்டு ஏகாதிபத்தியங்களுடன் சேர ஆலோசனை வைக்கிறார்கள். அதாவது ரசியா, பிரான்சு, ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளுடன் சேர ஆலோசனை வைக்கிறார்கள். இது ஆபத்தானது. இதைத்தான் இங்குள்ள அ. மார்க்ஸ் போன்றவர்கள் முன்வைக்கிறார்கள்" (சர்வதேச அரசியல் பொது வழியைத் தீர்மானிப்பது குறித்த ஓர் அறிமுகம், ஏ.எம்.கே, பக்கம் 31)
திருத்தல்வாதிகள் ரசியாவின் போரை ஆதரிக்கக் கூறும் பிற காரணங்கள் வருமாறு :
1. உக்ரைனை நேட்டோவில் இணைப்பது ரசியாவின் எல்லை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா?
உக்ரைன் நேட்டோவில் அதிகாரப்பூர்வமாக இணையவில்லையே தவிர அமெரிக்க-நேட்டோ நாடுகள் அரசியல்- பொருளாதார- இராணுவ உதவிகளைத் தொடர்ந்து உக்ரைனுக்கு செய்தே வந்துள்ளன. தவிரப் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளான போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ளன. நேட்டோ விரிவாக்கத்திற்கு ரசியா ஒரு தூண்டுகோலாக இருந்தது குறித்து முன்பே பார்த்தோம். உக்ரைன் நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஜெர்மனியும் பிரான்சும் முட்டுக்கட்டை போட்டன. எனவே உக்ரைன் நேட்டோவில் இணைக்கப்படாது எனத் தெரிந்துதான் ரசியா போர் தொடுத்தது. எனவே நேட்டோ விரிவாக்க எதிர்ப்பு என்பது ரசியாவின் நாசகரப் போருக்குத் தரப்படும் ஜனநாயக முகமூடியே.
உக்ரைனை நேட்டோவில் இணைப்பது ஐயத்திற்கிடமின்றி அமெரிக்காவின் கிழக்கு ஐரோப்பிய மேலாதிக்கமே. ஆனால் ரசியாவின் நோக்கம் என்ன? ரஷ்யாவின் நோக்கமும் கிழக்கு ஐரோப்பாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவுவதுதான். எல்லை இறையாண்மை மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என புதின் கூறுவது உண்மையில் கிழக்கு ஐரோப்பிய மேலாதிக்கத்திற்கான அச்சுறுத்தலே; காஜ்ப்ரோம் கார்ப்பரேட் இறையாண்மைக்கான அச்சுறுத்தலே ஆகும்.
உக்ரைனின் எல்லைகளை மாற்றியமைத்து கிரீமியாவையும், டோன்பாசையும் தன்னுடன் பலவந்தமாக இணைத்துக்
கொண்டு அவற்றைச் சுதந்திரக் குடியரசுகளாக புதின் அறிவிப்பதுதான் உண்மையில் உக்ரைன் மக்களின் இறையாண்மைக்கும் உக்ரைன் அரசியல் சட்டத்திற்கு எதிரானதும் ஆகும். உண்மையில் ரசியாவால்தான் உக்ரைன் எல்லைப் பாதுகாப்புக்கு - எல்லை இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் இறையாண்மை குறித்துப் பேச அங்குப் பொம்மை ஆட்சி நடத்தும் அமெரிக்காவிற்கும் அருகதை இல்லை. உக்ரைன் எல்லைகளை மாற்றியமைத்த ரசியாவிற்கும் அருகதை இல்லை. எல்லைப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என்பதெல்லாம் சமூக தேசிய வெறியைக் கட்டவிழ்த்துவிட்டு தமது அநீதி யுத்தத்தை நியாயப்படுத்த ஏகாதிபத்திய நாடுகள் காலங்காலமாகக் கூறிவரும் கட்டுக்கதைகள்தான். இது ஏகாதிபத்தியங்களின் பிறவிக்குணம்.
2. இதே போன்று உக்ரைனில் பாசிச ஆட்சியை அகற்றுவது என்பதும் ரசியாவின் ஆக்கிரமிப்பு போருக்குத் தரப்படும் ஜனநாயக முகமூடியே ஆகும். பெலாரஸ், சிரியா போன்ற நாடுகளில் பிற்போக்கான பாசிச ஆட்சியை நிறுவியுள்ள ரசியா, உக்ரைனில் ஜனநாயக ஆட்சியை நிறுவும் என்று நம்புவது அடி முட்டாள்தனம் ஆகும். உக்ரைனில் ரசியா இன்னொரு பாசிச ஆட்சியை நிறுவுமே தவிர ஜனநாயக ஆட்சியை நிறுவ அதுவொன்றும் சோசலிச நாடு இல்லை. இலாப வெறிபிடித்த ஏகாதிபத்திய நாடு.
மார்ச் 20 அன்று, அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் யுத்த தந்திரம் (குவாட்) ஐரோப்பாவில் நேட்டோ விரிவாக்கத்திற்கு இணையான ஆபத்துகளை உள்ளடக்கிய திட்டமாகும் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். நாளை மோடியின் நாஜி வகைப்பட்ட பாசிச ஆட்சியை அகற்றி ஜனநாயக ஆட்சியை உருவாக்குவதாகவும்; இந்தியா குவாட்டில் செயல்படுவதால், ஆக்கஸ் கூட்டமைப்பை ஆதரிப்பதால், தென்சீனக் கடலில் நேட்டோ போர்க்கப்பல்கள் நிறுத்துவதால் தனது எல்லைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும்; அருணாச்சலம் மற்றும் காஷ்மீரில் இந்தியா எல்லைகளை மீறுவதாகவும் சொல்லி சீனா நம் நாட்டின் மீது படையெடுத்தால் அதை ஆதரிக்க முடியுமா? திருத்தல்வாதிகள் ஆதரிப்பார்கள். நாம் ஆதரிக்க முடியாது. இதே காரணம் சொல்லி அமெரிக்கா இந்தியாவைக் கருவியாகக் கொண்டு சீனா மீது யுத்தம் தொடுத்தால் நாம் ஆதரிக்க முடியுமா? ஆதரிக்க முடியாது. சீனாவின் ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்தும், மோடி ஆட்சியைக் குவாட்டில் இருந்து வெளியேறக் கோரியும் மக்களைத் திரட்டி போராட வேண்டுமே தவிர அமெரிக்க-சீனாவின் அநீதி யுத்தத்தை ஆதரிக்க முடியாது.
சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆப்கானை ஆக்கிரமித்த போது திருத்தல்வாதிகள் ஆதரித்தார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்க சீனா - ரஷ்யா மற்றும் அமெரிக்க- இந்தியா அணிகள் போட்டி போட்டு இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்ததை திருத்தல்வாதிகள் ஆதரித்தார்கள். தமிழக மீனவர்களைச் சீன-சிங்களக் கடற்படை கூட்டுச் சேர்ந்து கொன்றதை ஆதரித்தார்கள்.
இன்று காஜ்ப்ரோம் எண்ணெய் பசிக்காக உக்ரைன் மக்களின் ரத்தம் உறிஞ்சப்படுவதை ஆதரிக்கிறார்கள். காஜ்ப்ரோம் - நார்ட் ஸ்ட்ரீம் குழாய்களில் ஓடுவது எண்ணெய் அல்ல; உக்ரைனிய- ரசிய தேசிய இனங்களின் இரத்தம்.
நாளை சொந்த நாட்டை ரசியாவும் சீனாவும் ஆக்கிரமித்தாலும் சோசலிச நாடுகள் என்ற பெயரில் வெட்கக் கேடான முறையில் ஆதரிப்பார்கள்.
3. ஏகாதிபத்திய நாடு ஓர் காலனிய, அரைக் காலனிய, ஒடுக்கப்பட்ட நாட்டின் மீது ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தினால் அப்போது 'தாய் நாட்டைப் பாதுகாப்போம்' என்ற முழக்கம் பொருந்தும் எனவும், அந்நாட்டின் தேசிய விடுதலைப் போரை ஆதரிக்க வேண்டும் எனவும் லெனின் கூறினார்.
இடது ரசியா (Russian Left) எனப்படும் டிராட்ஸ்கியக் கட்சி லெனின் சொன்ன மேற்கோளை உக்ரைனுக்குப் பொருத்தி ஜெலன்ஸ்கி அரசை ஆதரிக்கிறது. இந்தப் போர் ஒடுக்கப்பட்ட நாடான உக்ரைனுக்கும் ரசியாவிற்கும் இடையில் நடக்கும் போராக மட்டுமே அக்கட்சி பார்க்கிறது. உக்ரைன் அரசு அமெரிக்க - நேட்டோவின் கருவியாக இருந்துகொண்டு போர் நடத்துகிறது என்பதைப் பார்க்க மறுக்கிறது. இந்தப் போர் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடக்கும் பனிப்போர் ஆகும்.
உக்ரைன் மக்கள் அமெரிக்க- நேட்டோவின் ஆதிக்கத்தையும், ரஷ்ய ஆதிக்கத்தையும் எதிர்த்து நடத்தும் தேசியப் போரில் - நீதிப் போரில் 'தாய்நாட்டை பாதுகாப்போம்' என்பது பொருந்தும். ஆனால் ஜெலன்ஸ்கி அரசு அமெரிக்காவின் கருவியாக இருந்து கொண்டு சமூக தேசிய வெறியைத் தூண்டிவிட்டு 'தாய் நாட்டைப் பாதுகாக்கும் போர்' என்று கூறி உக்ரைன் மக்களைப் பலி கொடுப்பது ஏற்க முடியாதது. அது தேசியப் போர் அல்ல; சமூக தேசிய வெறிப் போர்; அமெரிக்க ஆதரவுப் போர்.
அமெரிக்கா ஒடுக்கப்பட்ட நாடான வெனிசுலா மீது 2019 இல் ஆக்கிரமிப்பு யுத்த முயற்சியில் ஈடுபட்ட போது, இங்குள்ள திருத்தல்வாதிகள் (இடது ரசியா எனும் டிராட்ஸ்கிய கட்சி உக்ரைன் விசயத்தில் சொல்வதைப்போல்) அதை அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்குமான பிரச்சினையாக மட்டும் பார்த்து ஒடுக்கப்பட்ட நாட்டின் தாய்நாட்டு பாதுகாப்பு போர் பொருந்தும் என்று கூறி வெனிசுலா அரசின் பக்கம் நிற்க வேண்டும் என்றார்கள். வெனிசுலா அரசு ரசிய- சீனாவின் கருவியாக இருந்து கொண்டு அமெரிக்க எதிர்ப்பு போருக்குத் தயாரித்தது என்பதை மூடி மறைத்தார்கள். வெனிசுலாவில் ரசிய-சீன முகாம் இராணுவ தளங்களை நிறுவி இருந்ததை மூடி மறைத்தார்கள். வெனிசுலாவை யுத்த களமாகக் கொண்டு அமெரிக்காவும் ரசிய-சீனாவும் நடத்திய பனிப்போர் தயாரிப்பு என்பதை மூடிமறைத்தார்கள். வெனிசுலாவில் ரசிய-சீன ஆதரவு நிலையிலிருந்தே தாய்நாட்டு பாதுகாப்பு போர் என்ற முழக்கம் பொருந்தும் என்றனர். ஆனால், அவர்களே, இன்று ஒடுக்கப்பட்ட நாடான உக்ரைன் விசயத்தில் தாய்நாட்டுப் பாதுகாப்பு போர் எனும் அந்த முழக்கம் பொருந்தாது என்கின்றனர். தங்கள் நிலைப்பாட்டை தாங்களே மீறி தமது கன்னத்தில் தாமே அறைந்து கொள்கின்றனர்.
ஒரு ஏகாதிபத்திய நாட்டின் ஆதரவுடன் நடத்தும் போர் தேசியப் போர் என புது விளக்கம் அளிக்கின்றனர். தேசியப் போர் என்பது அனைத்து ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்த தேசிய விடுதலைப் போர். ஒரு ஏகாதிபத்திய ஆதரவுடன் நடத்துவது தேசியப் போர் அல்ல. நாட்டை அந்த ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாக மாற்றும் போர்; தரகு முதலாளித்துவ போர்.
முதலாளித்துவ புரட்சி சகாப்தத்தில் முதலாளித்துவ வர்க்கம் முற்போக்கு பாத்திரம் வகித்த கட்டத்தில் அந்த வர்க்கத்தின் தேசியப் போர்களை ஆதரிக்கலாம் எனும் மார்க்சின் மேற்கோள்களை உதாரணம் காட்டி ஜெர்மனியின் ஏகாதிபத்தியப் போரை ஆதரித்த காவுத்ஸ்கியர்களின் வாரிசுகள் இவர்கள். அப்போது லெனின் இந்த சகாப்தம் ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்க சகாப்தம் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை எனவும், முதலாளித்துவ வர்க்கம் முற்போக்குத் தன்மையை இழந்துவிட்டது எனவும், இது ஏகாதிபத்தியங்களின் அநீதிப் போர் எனவும் கூறினார்.
வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து வெனிசுலா ஆளும் வர்க்கம் எந்த ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்காகவும் நிற்காமல் - அதாவது ரசிய - சீனாவைச் சாராமல் போரிட்டால் அதை ஆதரிக்க முடியும். ஆனால் ரசிய- சீனாவின் அரசியல் - பொருளாதார - இராணுவ ஆதிக்கத்தை நாட்டிற்குள் அனுமதித்து, அவற்றின் ராணுவ தளங்களை அனுமதித்து 'தாய் நாட்டை பாதுகாக்கும் போர்' என்று முழங்கினால் அது தேசிய போர் அல்ல; நிச்சயம் அது சீன-ரசியாவின் புதிய காலனியாக வெனிசுலாவை மாற்றுவதற்கான போராகும். அதை நாம் ஆதரிக்க முடியாது. உக்ரைன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்புப் போரை ஆதரிக்கும் - ரசிய ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியான மதுரோ தேசியவாதியும் அல்ல; அவர் நடத்துவது தேசியப்போரும் அல்ல. அது போலவே நேட்டோவின் கருவியாக இருந்து கொண்டு ரசிய எதிர்ப்பு போர் நடத்தும் ஜெலன்ஸ்கி அரசின் போரைத் தாய்நாட்டு பாதுகாப்பு போர், தேசியப் போர் எனும் முகமூடிகளில் ஆதரிக்க முடியாது.
ஒடுக்கப்பட்ட நாட்டின் தாய்நாட்டு பாதுகாப்பு போரை ஆதரிப்போம் என்று பேசியவர்கள் இன்று ஏகாதிபத்திய ரசியாவின் ஆக்கிரமிப்புப் போரை, தாய் நாட்டுப் பாதுகாப்பு - தற்காப்பு போர் என்று கூறி அதை ஆதரிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்கள். நல்ல முன்னேற்றம்! திருத்தல்வாதம் பூப்பெய்திவிட்டது!
70 ஆம் ஆண்டு திட்டம் இந்தியப் புரட்சியின் இலக்குகளாக அமெரிக்கா ரசியா என இரு ஏகாதிபத்தியங்களையும் கூறுகிறது. 90களுக்கு பிறகு இந்தியா அமெரிக்காவின் புதிய காலனியாக மாறியது. இருப்பினும் இந்திய-ரசிய உறவுகள் முறிந்துவிடவில்லை. இராணுவ, எண்ணெய் -எரிவாயு துறைகளில் ரசியாவின் அந்நிய முதலீடு தொடரவே செய்தது. இந்தியா ரசியாவிடமிருந்து 50% முதல் 70% வரை இராணுவ தளவாட ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. ரசிய ஏகாதிபத்தியத்தை ஆதரிப்பதன் மூலம் இவர்கள் 70 ஆம் ஆண்டு திட்டத்தை கைவிட்டுவிட்டார்கள். அமெரிக்கா, ரசியா இரு ஏகாதிபத்தியங்களையும் எதிர்ப்பது அமெரிக்க சார்பு என சொல்கிறார்கள். அதாவது அமெரிக்கா சோவியத் சமூக ஏகாதிபத்தியம் இரண்டையும் இலக்குகளாக முன்வைத்து வீழ்த்தச் சொல்லிய 70ஆம் ஆண்டு திட்டம் தவறு; அது அமெரிக்கச் சார்பு திட்டம் எனும் கருத்தை மறைமுகமாக முன்வைக்கிறார்கள். பாசிசம் நிலவும்போது புதிய ஜனநாயகப் புரட்சி பற்றி பேசுவதே திருத்தல்வாதம் என்று சொல்வதன் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சியை கைவிட்டார்கள். இதைத் தொடர்ந்து தற்போது 70ஆம் ஆண்டு திட்டத்திற்கும் துரோகம் இழைத்து விட்டார்கள். அமெரிக்க எதிர்ப்பின் பேரில் ரசிய-சீன முகாமுடன் இணைவது அணிசேரா கொள்கை என்று கூறுகிறார்கள். எந்தவொரு ஏகாதிபத்தியத்தையும் சாராமல் இருப்பதே அணிசேரா கொள்கை என்ற சூ-என்-லாய் நிலைப்பாட்டிற்கு துரோகம் இழைக்கிறார்கள். ரசிய ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக மாறிவிட்டார்கள். தங்களது எஜமான் புதினின் போரை ஆதரிப்பதால் மோடி கும்பலுக்கு முட்டுக் கொடுக்கும் அளவிற்கு தாழ்ந்து விட்டார்கள். நாஜி வகைப்பட்ட இந்துத்துவப் பாசிச ஆட்சிக்கு காவடி தூக்குகிறார்கள். ஈராக், ஆப்கானில் அமெரிக்கா ஜனநாயக ஆட்சி உருவாக்குவதாக கூறி அந்நாடுகளை ஆக்கிரமித்தது. இன்று உக்ரைனில் ஜனநாயக ஆட்சி நிறுவுவதாக கூறி ரஷ்யாவும் அந்நாட்டின் மீது ஆக்கிரமிப்பு யுத்தம் தொடுத்துள்ளது. நாஜி வகைப்பட்ட ஜெலன்ஸ்கி ஆட்சியை அகற்ற நாஜி வகைப்பட்ட பாசிச புதின் ஆட்சி போரிடுகிறதாம்! அதை நாஜி வகைப்பட்ட மோடியின் பாசிச ஆட்சி ஆதரிக்கிறதாம்! கேலிக்கூத்து!
4. ஏகாதிபத்தியம் என்றால் யுத்தம் என்றார் லெனின். ஆனால் திருத்தல்வாதிகள் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்றால் மட்டுமே யுத்தம் என்கிறார்கள். சீன ஏகாதிபத்தியம் - ரசிய ஏகாதிபத்தியத்தின் பல்துருவம் என்றால் அரை ஜனநாயகம்; முக்கால் ஜனநாயகம்; அன்னை தெரசா; அமைதிப் புறா என்கிறார்கள். வெட்கக்கேடான, இழிவான, அருவருக்கத்தக்க ஏகாதிபத்திய அடிவருடித்தனம்!!
இதுவும் அமெரிக்க ஒற்றை துருவ மேலாதிக்க கருத்தின் விளைவே ஆகும். புற நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களை பார்க்க தயாரில்லை.
இன்று அணு ஆயுதங்களை அதிகமாக வைத்திருக்கும் நாடு ரசியாதான் (5930). அமெரிக்கா இரண்டாம் இடத்திற்கு (5436) சென்று விட்டது.
அமெரிக்காவின் இராணுவ தளங்கள் மத்திய ஆசிய மத்திய கிழக்கு நாடுகளில் கலைக்கப்பட்டு ரசிய-சீன முகாம்களால் புதிய இராணுவத் தளங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
ரசியாவின் இராணுவ தளங்கள் உள்ள நாடுகள்: ஆர்மீனியா, பெலாரஸ், ஜார்ஜியா (தெற்கு ஒசிட்டியா), கஜகஸ்தான், சிரியா, கிர்கிஸ்தான், கிரீமியா.
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, எகிப்து, எரித்ரியா, மடகாஸ்கர், மொசாம்பிக், சூடான் ஆகிய நாடுகளில் இராணுவ தளங்கள் அமைக்கத் துவங்கியுள்ளது.
சீனாவின் இராணுவ தளங்கள் அமைந்துள்ள நாடுகள்: இலங்கை, டிஜிபவுட்டி (ஆப்பிரிக்கா), தென் சீனக் கடல், லியோனிங்- ஷான்டங், பாகிஸ்தான் (Gwadar), பாபுவா (papua) நியூ கினியா போன்ற பசிபிக் தீவுகள், மியான்மார் (coco island), தஜகிஸ்தான்.
அமெரிக்கா பலவீனம் அடைந்து வருவதையும் சீன-ரசிய முகாம் பலமடைந்து வருவதையும் இவை எடுத்துக் காட்டுகின்றன. அமெரிக்காவின் உலக மேலாதிக்க முயற்சி தகர்ந்துவிட்டதற்கு ஆப்கான் சாட்சி! ரசிய-சீன முகாம் பலமடைந்து வருவதற்கு உக்ரைன் சாட்சி!
1990களுக்குப் பிறகான அமெரிக்காவின் போர்க் குற்றங்கள், ஆக்கிரமிப்பு போர்கள் வரலாறு காணாத காட்டுமிராண்டித்தனம் ஆகும். போர்க்குற்றவாளியான அமெரிக்காவை எதிர்த்து சீனாவும் ரசியாவும் செய்தது என்ன? அமெரிக்காவின் 'இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப்போரை' ரஷ்யாவும் சீனாவும் ஆதரித்தன. அமெரிக்காவின் ஆப்கான் ஆக்கிரமிப்பை ஆதரித்தன. தாலிபான் பயங்கரவாதிகள் தங்களது மத்திய ஆசிய மேலாதிக்கத்திற்கு எதிரிகள் என்பதில் இருந்தும், உய்குர் இஸ்லாமியப் பயங்கரவாத எதிர்ப்பிலிருந்தும், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத எதிர்ப்பிலிருந்தும் அதை ஆதரித்தன. பிறகு தாலிபான் ஆட்சி அகற்றப்பட்டதும் எதிர்க்கத் துவங்கின. ஈராக், லிபியா, ஈரான், வெனிசுலா, துனிசியா உள்ளிட்ட நாடுகள் மீது 1990களுக்குப் பிறகு அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளை கண்டித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அவற்றை தடுக்க போராடவில்லை. இன்று பலமான ஏகாதிபத்தியமாக வளர்ந்ததும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளை தமது மேலாதிக்க நலன்களிலிருந்து எதிர்க்கின்றன. வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை அவை எதிர்ப்பது அந்நாடுகளில் ஜனநாயகத்தை நிலை நாட்ட அல்ல. மாறாக அவற்றைத் தங்களின் புதிய காலனியாக மாற்றவே.
5. கிரீமியா ரசியாவிற்கு சொந்தமானது என்கிறார்கள் திருத்தல்வாதிகள். அவர்களின் தலைவரான குருசேவ்தான் 1954இல் கிரீமியாவை உக்ரைனுடன் இணைத்தார். உக்ரைனின் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தன்னாட்சி பிரதேசமான கிரீமியாவை மேலாதிக்க நலன்களுக்காக தன்னுடன் பலவந்தமாக ரசியா இணைத்துக்கொண்டது. தேசிய இனப் பகைமைகளை பயன்படுத்தி தேசிய வெறியூட்டி கிரீமியாவை துப்பாக்கி முனையில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதை ஆதரிப்பது லெனினியத்திற்கு மாறானது.
தேசிய இனங்கள் ஏகாதிபத்தியங்களால் இவ்வாறு பலவந்தமாக இணைக்கப்படுவது பற்றி லெனின் கூறுவதாவது : "ஒரு தேசம் இன்னொரு தேசத்துடன் இணைக்கப்படுவது பற்றி நாம் பேசும்போது, அது அந்த பெரும்பான்மை மக்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையிலான தேர்வாக இல்லாமல், அந்த தேசத்தின் மன்னன் அல்லது அரசால் தீர்மானிக்கப்பட்டால் அது வல்லிணைப்பாகும்" (போரும் புரட்சியும் லெனின் LCV 24 p 398-421)
கிரீமியா ரசியாவுடன் இணைக்கும் முடிவு புதினால் எடுக்கப்பட்ட முடிவு. தேசிய இனப் பகைமைகளைப் பயன்படுத்தி, ஜார் ஆட்சியின் மாருஷ்யாவை மீண்டும் நிறுவுவது எனும் பெருந்தேசிய இனவெறிக் கொள்கையின் அடிப்படையில் புதின் எடுத்த முடிவு. அது அங்குள்ள ரசிய மக்களின் சுயவிருப்பத்தினாலான தேர்வு அல்ல. தன்னாட்சிப் பிரதேசமான கிரீமியாவை மட்டுமின்றி, உக்ரைனின் ஆட்சிக்கு உட்பட்ட டோன்பாஸ் பிராந்தியமும் இவ்வாறே புதினால் ரசியாவுடன் இணைக்கப்பட்டது. இவ்விரண்டு பகுதிகளுக்கும் புதின் சுயநிர்ணய உரிமை கொடுத்துவிடவில்லை. ரசிய ஆதரவு ஆட்சிகள் உக்ரைனில் இருந்த போது அதற்கு முயலவும் இல்லை. மாறாக மாருஷ்யா எனும் பெருந் தேசியவெறிக் கொள்கையின் அடிப்படையில் ரசியாவின் அங்கமாக நவீன ஜார் மன்னன் புதினால் மாற்றப்பட்டுள்ளன.
அமெரிக்கா கிரீமியாவின் பிரிவினையைக் கண்டித்த போது புதின் சொன்னார் "கிரீமியாவைப் பிரித்தது தவறென்றால் கொசோவாவை பிரித்ததும் தவறுதான்". கிரீமியப் பிரிவினையை ஆதரித்தால் கொசோவா பிரிவினையையும் நாம் ஆதரிக்க வேண்டிவரும். தமிழீழ விடுதலைப் போர் நசுக்கப்பட்டதையும் நாம் ஆதரிக்க வேண்டியது இருக்கும். ஏகாதிபத்தியவாதிகள் தங்கள் மேலாதிக்க நலன்களுக்காகத் தேசிய இனங்களை உடைப்பதும், தேசிய இனங்களின் ஒற்றுமையைச் சிதைப்பதும், பலவந்தமாக தங்கள் நாட்டோடு இணைப்பதையும் ஆதரிக்க முடியாது. ஏகாதிபத்தியம் தனக்குத் தேவை எனில் கொசோவாவை, கிரீமியாவைப் பிரிக்கும்; தேவை இல்லை எனில் தமிழ் ஈழத்தை ஒடுக்கும்.
கிரீமியா, டோன்பாஸ் உரிமைகளுக்கான போர் என்று சொல்லி போரைத் துவங்கிய புதின் முழு உக்ரைனையும் ஆக்கிரமிக்க யுத்தம் நடத்துவார் என நாங்களே எதிர்பார்க்கவில்லை என்று ரஷ்ய நாடாளுமன்றத்தின் உறுப்பினர் (MP) ஜிகானோவ் (CPRF – Communist party of Russian Federation) கூறியுள்ளார். ஆனால் இங்குத் திருத்தல்வாதிகள் (சிபிஐ, சிபிஎம்) கிரீமியா, டோன்பாஸ் சுதந்திரத்திற்கான போர் என்று கதை அளக்கிறார்கள்.
6. புதின் மீண்டும் சோசலிச குடியரசை அமைக்கவே உக்ரைன், கிரீமியாவை கைப்பற்றப் போரிடுகிறார் என திருத்தல் வாதிகள் கூறுகிறார்கள். ஆனால் மாருஷ்ய இனவாதம் ஏற்புடையதல்ல எனவும் புதினுக்கு தடவிக் கொடுக்கின்றனர். ஆனால் இவர்களின் தலைவர் புதின் கூறுகிறார் "சோவியத் யூனியன் உடைந்த போது வருந்தாதவர்கள் இதயம் இல்லாதவர்கள். மீண்டும் சோசலிச சோவியத் யூனியன் அமையும் எனக் கருதுபவர்கள் மூளை இல்லாதவர்கள்" என்கிறார். மேலும் புதின் "உக்ரைன் ரசியாவின் பிரிக்க முடியாத அங்கம். ஜார் ஆட்சியின் மாருஷ்யாவை மீண்டும் உருவாக்குவதே எனது இலட்சியம். லெனினும் ஸ்டாலினும் தேசங்களுக்குப் பிரிந்து போகும் உரிமை தந்து நாட்டை நாசமாக்கிவிட்டனர்" என்கிறார். லெனின், ஸ்டாலினை இழிவுப்படுத்தினாலும் புதினின் போர் வெறியை ஆதரிப்பதற்கு திருத்தல்வாதிகள் வெட்கப்படவே இல்லை. உக்ரைன், ரசிய தேசிய இனங்கள் ஒரே மரபினம் என்ற ஜாரின் மாருஷ்ய இனவாதத்தை முன்னெடுக்கும் புதின் கிரிமியா மற்றும் டோன்பாஸ் பிராந்தியங்களுக்கு தன்னாட்சி வழங்குவார் என்று மோசடியாக பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஜார் மன்னனின் மாருஷ்ய இனவாதம் மிகவும் பிற்போக்கான இனவெறிக் கொள்கை என்றார் லெனின். ஆனால் புதின் அது ஜாரின் ஜனநாயகம் என்கிறார். புதினின் மாருஷ்ய இனவெறி பாசிசமும் நாஜி வகைப்பட்ட பாசிசமே. இழந்து போன கிழக்கு ஐரோப்பியச் சந்தைகளை ரசியச் சந்தையுடன் ஒன்றிணைக்கவே மாருஷ்ய இனவாதப் பாசிசத்தைக் கட்டியமைக்கிறார் புதின். மாருஷ்ய இனவாதப் பாசிசம் என்பது வடிவம் மட்டுமே. அதன் பொருளியல் அடிப்படை கிழக்கு ஐரோப்பிய - மத்திய ஆசிய - மத்திய ஐரோப்பிய நாடுகளை மறுபங்கீடு செய்வதே. நவீன ஜார் மன்னன் புதினின் கோரப்பற்களில் வடியும் உக்ரைன் - கிரீமிய மக்களின் இரத்தத்தைச் சுவைத்து சோசலிசம் இனிக்கிறது என்கிறார்கள் திருத்தல்வாதிகள்.
புதிய ஜார் மன்னன் (சுருக்கமாக புதின்) ஜெலன்ஸ்கியின் பாசிச ஆட்சியை நீக்கி ஜனநாயக அரசை உருவாக்கப் போகிறாராம்! ஹிட்லரின் நாஜி ஆட்சியை நீக்கிய ஸ்டாலின் போல, ஜெலன்ஸ்கியின் நாஜி ஆட்சியை அகற்றவே புதின் போரிடுகிறார் என்று கொஞ்சமும் கூச்சமின்றி மானவெட்கமின்றி அருவருப்பான முறையில் வெட்கக்கேடான வகையில் பேசுகிறார்கள் ரசிய ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள்.
ஆகவே இவ்வகை ஏகாதிபத்திய ஆதரவு திருத்தல்வாதப் போக்குகளை முறியடிக்காமல், அமெரிக்க ஏகாதிபத்தியம், ரசிய- சீன ஏகாதிபத்தியம், வளர்ந்து வரும் ஜெர்மன் ஏகாதிபத்தியம் உள்ளிட்ட அனைத்து ஏகாதிபத்தியங்களின் கோரப்பிடியிலிருந்தும் நுகத்தடியிலிருந்தும் உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் விடுவிப்பது சாத்தியமில்லை.
சமரன் பின்வருமாறு முழங்குகிறான்!
1. உக்ரைன் மறு பங்கீட்டிற்கான அமெரிக்க-நேட்டோ மற்றும் ரஷ்ய - சீன ஏகாதிபத்திய முகாம்களின் பனிப்போரை உள் நாட்டுப் போராக மாற்றுவது- சோசலிசப் போரை முன்னெடுப்பது;
உக்ரைனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள நேட்டோ மற்றும் ரஷ்யாவின் ராணுவ தளங்களைக் கலைப்பது;
அமெரிக்க நேட்டோவின் எடுபிடியான ஜெலன்ஸ்கியின் நாஜிப் பண்பைக் கொண்ட பாசிச ஆட்சியை வீழ்த்துவது;
ஒடுக்கப்பட்ட நாட்டு பாட்டாளி வர்க்க இயக்கங்கள் மற்றும் தேசிய விடுதலை இயக்கங்களின் பக்கம் நின்று சோசலிசப் புரட்சியின் மூலம் உக்ரைனில் பாட்டாளி வர்க்க ஜனநாயக ஆட்சியை நிறுவுவது; கிரீமியா டோன்பாஸ் பிராந்தியங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது; உக்ரைன் - ரசிய தேசிய இனங்கள் உள்ளிட்ட அனைத்து தேசிய இனங்களின் பாட்டாளி வர்க்க ஒற்றுமையையும் வளர்த்தெடுப்பது;
எனும் மா-லெ வழியில் அணிதிரள உக்ரைன் மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறோம்!
2. உக்ரைன் சோசலிசப் புரட்சிக்குத் துணை நிற்கவும்;
நேட்டோ, ஆக்கஸ், குவாட், ஷாங்காய் மற்றும் சி.எஸ்.டி.ஓ (CSTO) உள்ளிட்ட அனைத்து ஏகாதிபத்திய அரசியல்-பொருளாதார-ராணுவ கூட்டமைப்புகளையும் கலைக்கப் போராடவும்;
ஒடுக்கப்பட்ட நாடுகள் மீண்டும் அணிசேரா கொள்கையைப் பின்பற்றி அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்கப் போராடவும்;
போரில் ஈடுபடும் ஏகாதிபத்திய நாடுகளிலுள்ள மக்கள் சொந்த நாட்டின் தோல்வியை நாடவும்; யுத்த எதிர்ப்பு இயக்கங்களைக் கட்டியமைக்கவும்;
உலக யுத்த தயாரிப்புகளை உள்நாட்டு யுத்த தயாரிப்புகள் மூலம் முறியடிக்கவும்;
ஏகாதிபத்திய எதிர் புரட்சிகர யுத்தங்களைப் புரட்சிகர யுத்தங்களால் முறியடிக்கவும்;
உலகத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கும் அறைகூவல் விடுகிறோம்!
3. மோடி ஆட்சியை குவாட் கூட்டமைப் பிலிருந்தும், உலக வர்த்தகக் கழகத்திலிருந்தும் வெளியேறக்கோரி போராட வருமாறு இந்திய மக்களை அறைகூவி அழைக்கிறோம்!
4. ஏகாதிபத்தியங்களுக்கு முட்டுக் கொடுக்கும் காவுத்ஸ்கிய கலைப்புவாதத்தை முறியடிப்போம்!
(முற்றும்)